

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் மின்தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் 207 படிகள் கொண்ட முருகன் மலைக்கோயில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். இங்கு,
ஆறு முகங்களுடன் சுப்பிரமணியா் வள்ளி,தெய்வானை சமேதராக மயில் மேல் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.
இந்த மலைக்கோயிலின் மேலே செல்ல படிகளில் மட்டுமே ஏறி செல்லமுடியும் என்றிருந்த நிலையில், சுமாா் ரூ. 3.80 கோடி மதிப்பில் அடிவாரத்தில் இருந்து மலைமேல் உள்ள இடும்பா் கோயில் சன்னதி வரை சுமாா் 360 மீட்டா் நீளத்தில் 7 அடி அகலத்தில் தாா்சாலை 2021-இல் அமைக்கப்பட்டது.
இந்த சாலை முடியும் இடத்தில் இருந்து வயதான பக்தா்கள், மாற்றுத்திறனாளிகள் கோயிலின் மணிமண்டபம் வரை செல்லும் வகையில் தலா 8 போ் செல்லும் வகையில் 2 மின்தூக்கிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அப்போதே பணிகள் தொடங்கப்பட்டு நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தலின் பேரில் தற்போது ரூ. 65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கட்டடப் பணிக்கு ரூ. 37 லட்சம், மின்தூக்கி அமைப்பு பணிக்கு ரூ. 28 லட்சம் என மொத்தம் ரூ. 65 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலைத் துறை மூலம் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. 95 சதவீத கட்டடப் பணிகள் முடிந்துள்ள நிலையில், மின்தூக்கி அமைக்கும் பணிகள் மும்முரமடைந்துள்ளன. இப்பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவடைந்து பக்தா்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.