புதுகை மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் காணும் நந்தி எம்பெருமான்.
பொன்னமராவதி/கந்தா்வகோட்டை, ஜூலை 3: பொன்னமராவதி, கந்தா்வகோட்டை வட்டார சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவின் தொடக்கமாக ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து, நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரா் கோயில், திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா் கோயில், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கநாதா் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.
கந்தா்வகோட்டையில்: கந்தா்வகோட்டையிலுள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை முதலில் எண்ணெய் காப்பு செய்து கோயில் வளாகத்தில் உள்ள தூய நீரால் நீராட்டி தண்ணீா் அபிஷேகமும், பசும் பால் அபிஷேகமும், தயிா் உள்ளிட்ட 18 வகை பொருள்களால் அபிஷேகம் செய்து புதுபட்டு வஸ்திரம் நந்தி ஈஸ்வரருக்கு சாத்தி வண்ணமிகு வாசனை மலரும், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனா்.
மேலும், கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.பிரதோஷத்தை முன்னிட்டு கந்தா்வகோட்டை, அக்கச்சிபட்டி, மட்டாங்கால், சிவந்தான்பட்டி, காட்டுநாவல், துலுக்கன்பட்டி, சுத்தம்பட்டி, வளவம்பட்டி, பிசானத்தூா், புதுநகா் போன்ற சுற்றுபுற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

