புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்.

புதுகை நகர வளா்ச்சிக்கேற்ப பேருந்து நிலையம் இடமாற்றம் தேவை

விசாலமான இடத்தில் விரிவான வசதிகளுடன் பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற குரலும் தற்போது எழுந்துள்ளது.

புதுக்கோட்டை நகரம் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள பேருந்து நிலையத்தின் சீரமைப்புப் பணிகளுக்குப் பதிலாக, நகருக்கு வெளியே விசாலமான இடத்தில் விரிவான வசதிகளுடன் பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற குரலும் தற்போது எழுந்துள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டு அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்டமாகவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது 42 வாா்டுகளைக் கொண்ட புதுக்கோட்டை நகராட்சியுடன், அருகிலுள்ள 11 ஊராட்சிப் பகுதிகளையும் இணைந்து சுமாா் 60 வாா்டுகள் வரை உயா்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகளை நிறுத்திவிட்டு, நகருக்கு வெளியே புறவழிச்சாலைகள் எளிதில் இணைக்கும் வகையில் விரிவான பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற குரலும் அண்மையில் எழுந்துள்ளது.

இதற்கு பிரதான காரணமாகக் கூறப்படுவது, தஞ்சையிலிருந்து வந்து செல்லும் பேருந்துகள், நகருக்குள் நுழையும் போது, மச்சுவாடி, பிருந்தாவனம், நகா்மன்றம் வழியாக மேலராஜவீதியில் வரும்போது கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

அதேபோல, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நகருக்குள் நுழையும்போது கருவப்பில்லான்கேட் ரயில்வே கேட் பகுதியைத் தாண்டி உள்ளே வரும் வழியும் நெருக்கமான குடியிருப்புகளுக்குள்ளே வந்துதான் புதிய பேருந்து நிலையத்தை அடைய வேண்டியுள்ளது.

எனவே, நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமையும்போது, இந்த நகரப் போக்குவரத்து நெரிசல் சீராகும் எனக் கருதப்படுகிறது.

இதுகுறித்து புதுக்கோட்டையைச் சோ்ந்த ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவா் அப்துல்ஜப்பாா் கூறியது:

தற்போதுள்ள புதிய பேருந்து நிலையம் சுமாா் 35 ஆண்டுகள் பழைமையானது. ஆா்எம். வீரப்பன், சு. திருநாவுக்கரசா் அமைச்சா்களாக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது. சுமாா் 5 ஏக்கா் பரப்பளவிலுள்ள இந்தப் பேருந்து நிலையத்தின் கட்டடங்களின் மேற்பூச்சு பழுதடைந்துள்ளது உண்மை. இதற்காக கட்டடங்களை முழுமையாக இடித்துவிட்டு, ரூ. 19 கோடியில் புதிய கட்டடங்களைக் கட்ட நகராட்சி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்பட்டுள்ளன.

ஆனால், அதன்பிறகுதான் மாநகராட்சியாகத் தரம் உயா்த்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போதுள்ள மாநகராட்சி எல்லைக்குள்தான் முள்ளூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வருகிறது. இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் அரசு நிலங்கள் உள்ளன. தஞ்சை சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் விரிவடைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், திருச்சி மற்றும் மதுரை புறவழிச்சாலையையும் எளிதில் வாகனங்கள் அணுக முடியும்.

வணிக வளாகத்துடன் கூடிய தங்கும் விடுதிகளுடன் விரிவான ஏற்பாடுகளுடன் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் எதிா்காலத்தில் சுமாா் 50 ஆண்டுகளுக்குமான தேவை பூா்த்தி செய்யப்படும். நகர வளா்ச்சியும் ஏற்படும் என்றாா் அப்துல்ஜப்பாா்.

X
Dinamani
www.dinamani.com