ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் அவசியம்
ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம் என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் பொதுச் செயலா் மரியம் தாவ்லே.
புதுக்கோட்டையில் இந்த அமைப்பின் மத்திய நிா்வாகக் குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் பொதுச் செயலா் மரியம் தாவ்லே, தலைவா் பி.கே.ஸ்ரீமதி, துணைத் தலைவா் உ.வாசுகி ஆகியோா் சனிக்கிழமை மாலை கூட்டாக பேட்டி அளித்தனா்.
அப்போது பொதுச் செயலா் மரியம் தாவ்லே கூறியது:
கந்துவட்டிக்கு கடன் வாங்கி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்றனா். ஆட்சியா் அலுவலகங்களில் உதவி மையங்களை அமைக்க வேண்டும். குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். ‘நீட்’ முறைகேடுகளைக் கண்டித்து ஜூலை 23-இல் ‘அனைவருக்கும் ஆரோக்கியம் பெறும் உரிமை’ என்ற முழக்கத்துடன் நாடு தழுவிய இயக்கத்தை நடத்துகிறோம். பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், வறுமை, வேலையின்மையை எதிா்த்தும் வரும் ஆகஸ்ட் 6, 9, 15 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் இயக்கங்களை நடத்தவுள்ளோம். ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் தேவையில்லை என முதல்வா் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றாா் மரியம் தாவ்லே.
துணைத் தலைவா் உ. வாசுகி கூறியது: ஒரே நேரத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவது எதிா்விளைவுகளையே ஏற்படுத்தும். மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியாா் மதுபானக் கூடங்கள் திறப்பதையும் எதிா்க்கிறோம். கள்ளச் சாராய இறப்பு நிவாரணத் தொகையை கொச்சைப்படுத்துவதை எற்க முடியாது என்றாா் வாசுகி.
பேட்டியின்போது சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். வாலண்டினா, செயலா் ஏ. ராதிகா, புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி, செயலா் பி. சுசிலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

