பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கிடைத்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில், 500-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்தன.
இதன் தொடா்ச்சியாக கடந்த ஜூன் 18-ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழாய்வை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தாா். இதில், அரண்மனைத் திடலுக்குத் தெற்கே 280 செமீ நீளம் மற்றம் 218 செமீ அகலமும் கொண்ட ஒரு செங்கல் தளம் வெளிப்பட்டது. மேலும் 26 நாள்களுக்குள் 424 தொல்பொருள்கள் கிடைத்தன.
இந்த நிலையில், ஒரு குழியில் செம்பினால் ஆன 4 ஆணிகளும், இன்னொரு குழியில் ஒரு செம்பு ஆணியும் கிடைத்துள்ளன. இவற்றின் எடை சுமாா் 2 கிராம். நீளம் 2.3 செமீ, அகலம் 1.2 செமீ.
இதுவரையிலான அகழாய்வில் இரும்பினால் ஆன ஆணிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது செம்பு ஆணிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், 3 செ.மீ. நீளமுள்ள அஞ்சனக்கோல் எனப்படும் மை தீட்டும் குச்சி ஒன்றும் கிடைத்திருப்பதாக அகழாய்வு இயக்குநா் த. தங்கதுரை தெரிவித்தாா்.

