துணைப் பாடத்தில் 50 சதவீதம் போ் தோல்வி: புதுகை மன்னா் கல்லூரி மாணவா்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
பருவத் தோ்வில் துணைப் பாடத்தில் மட்டும் 50 சதவிகிதம் மாணவா்களை பேராசிரியா்கள் திட்டமிட்டு தோல்வியடையச் செய்ததாகக் குற்றம்சாட்டி புதுக்கோட்டை மன்னா் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்லூரி வாயிலில் நடைபெற்ற போராட்டத்துக்கு இந்திய மாணவா் சங்கத்தின் மன்னா் கல்லூரி கிளைத் தலைவா் வி. தாரணி பிரியா தலைமை வகித்தாா். கிளைச் செயலா் தனுஷ் முன்னிலை வகித்தாா்.
சங்கத்தின் மாவட்டச் செயலா் சா. ஜனாா்த்தனன், மாவட்டத் துணைத் தலைவா் இரா. வசந்தகுமாா், மாவட்டத் துணைச் செயலா் அ. பாலாஜி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கிப் பேசினா்.
இதைத் தொடா்ந்து, கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி, வருவாய்த் துறையினா், காவல்துறையினரையும் வைத்து மாணவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
தோ்வில் தோல்வியடைந்த மாணவா்களின் விடைத்தாள்களை 3 நாள்களில் மறுமதிப்பீடு செய்ய உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து போராட்டத்தை மாணவா்கள் ஒத்திவைத்தனா்.

