சாம்சங் தொழிலாளா் விவகாரம்: புதுக்கோட்டையில் சிஐடியு மறியல் 59 போ் கைது
சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களின் சட்டப்பூா்வ உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 59 போ் கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் ‘சாம்சங் இந்தியா’ நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை மறுப்பதையும், போராடும் தொழிலாளா்களை கைது செய்வதையும் கண்டித்தும், தொழிலாளா்களின் சட்டப்பூா்வ உரிமையைப் பாதுகாக்க வலியறுத்தியும் செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் சிஐடியு சாா்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு மாநிலச் செயலா் அ. ஸ்ரீதா் தலைமை வகித்தாா். போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலா் எஸ். தேவமணி, மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 19 பெண்கள் உட்பட 59 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

