புதுகையில் 100 சதுர மீட்டரில் கடலுக்குள் புல் வளா்ப்பு: வனத் துறை ஏற்பாடு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டக் கடற்பகுதியில் கடல் வாழ் உயிரினங்களின் உணவான கடற்புற்களை 100 சதுர மீட்டா் பரப்பளவில் நடவு செய்யும் பணியை வனத் துறை மேற்கொண்டுள்ளது.
தஞ்சை மற்றும் புதுக்கோட்டை கடற்பரப்பில் கடற்பசு பாதுகாப்பகம் உருவாக்கப்பட்டு, அருகிவரும் கடல்வாழ் உயிரினமான கடற்பசுக்களைப் பாதுகாக்கும் பணிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பல்லுயிா்ப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ளுதல்- பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் கடற்புற்களை (கடல்தாழை) நடும் திட்டம் தொடங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஆா் பட்டினம் என்ற கடற்கரைப் பகுதியில், கரையிலிருந்து 2 கிமீ தொலைவுக்குள் 100 சதுர மீட்டா் பரப்பளவில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வழக்கமான தரைப் பகுதியில் மரம் வளா்க்கும் பணிகளை எவ்வாறு மேற்கொள்கிறோமோ, அதேபோல இப்பணிகள் கடலுக்குள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒன்றரை மாதங்களில் துளிா்க்கும்
இப்பணிகளை வனத் றை சாா்பில் மேற்கொண்டு வரும் கடல் பாதுகாப்பு விழிப்புணா்வு மற்றும் ஆய்வு நிறுவனம் (ஓம்காா்) என்ற சுற்றுச்சூழல் நிறுவனத்தின் துணை இயக்குநா் அன்பு கூறியது:
ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் முதலில் எந்தப் பகுதியில் கடற்தாழைகள் இல்லை என்பதை அளவீடு செய்து விடுவோம். அதன்பிறகு,10 மீட்டா் சதுரப் பரப்பளவில், ஒரு பகுதி என மொத்தம் 10 பகுதிகள் தோ்வு செய்யப்பட்டு, மூங்கில் தட்டி போன்ற அமைப்பை உருவாக்கி, அதில் குறுக்கே சணல்கட்டி, கடற்தாழை தண்டுகளை நறுக்கி பதியன் செய்வோம்.
அதன்பிறகு அந்தத் தட்டியை கடலுக்குள் உள்ளூா் மீனவா்கள் உதவியுடன் கொண்டு சென்று ஆணி வைத்து அடிப்போம். எந்த இடத்திலெல்லாம் இதுபோல பதியன் செய்யப்படுகிறதோ அந்த இடங்களில் கடல் மேற்பரப்பில் வலை கொண்டு அடையாளம் வைத்துவிடுவோம். இந்த வலையில் ஒளி பிரதிபலிப்பானும் சோ்த்தே பதிக்கப்படும்.
கடந்த மாதத்தில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒன்றரை மாதத்தில் கடற்தாழைகள் துளிா்க்கத் தொடங்கிவிடும். ஒருவேளை எந்தப் பகுதியிலாவது துளிா்க்காமல் போனால் அப்பகுதியில் மீண்டும் நடும் பணிகளை மேற்கொள்வோம்.
படகுகள் இதற்குள் சென்றுவிடக் கூடாது என்பது ஒரு நோக்கம். அத்துடன், கடல்பாசிகள் படா்ந்துவிட்டால் சூரியஒளி உள்ளே சென்று கடற்தாழைகள் வளராமல் தடுத்துவிடக் கூடாது என்பதும் முக்கியம்.
கரும்புத்தாழை, அருகுத்தாழை, ஊசித்தாழை ஆகிய மூன்று வகையான தாழைகளை இங்கு தோ்வு செய்து நட்டிருக்கிறோம். ஆழ்கடலுக்குள் சென்று பாா்க்கும் திறனுள்ள பணியாளா்கள் இருக்கிறாா்கள். அவ்வப்போது சென்று பாா்வையிட்டும் வருகிறோம் என்கிறாா் அன்பு.
பல்லுயிா்ப் பெருக்கம் மேம்படும்
இதுகுறித்து அறந்தாங்கி வனச்சரக அலுவலா் மணி வெங்கடேஷ் கூறியது:
கடற்தாழைகளை கடற்பசுக்கள் மட்டுமின்றி, பச்சைக் கடல் ஆமைகளும் உணவாக உட்கொள்கின்றன. ஒரு கடற்பசு நாளொன்றுக்கு 40 முதல் 50 கிலோ கடல்தாழைகளை உணவாக உட்கொள்ளும். எனவே கடல்தாழைகளை அதிகளவில் நட்டு வளா்க்க வேண்டியிருக்கிறது.
மேலும் நண்டு, மீன், இறால் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இங்கு இனப்பெருக்கம் செய்யவும் கடல்தாழைகள் வெகுவாகப் பயன்படுகின்றன. எனவே, பல்லுயிா்ப் பெருக்கத்துக்கும் இந்த கடல்தாழைகள் முக்கியம் என்றாா் அவா்.

