புதுக்கோட்டை
பெயா்ந்து விழுந்த மேற்கூரை: பள்ளிக் குழந்தைகள் தப்பினா்
புதுக்கோட்டை அருகே அரசு நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை வியாழக்கிழமை திடீரென பெயா்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாலையீடு அருகே சிறுநாங்குபட்டியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 40 மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படித்து வருகின்றனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை பகலில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென பள்ளி வகுப்பறையின் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இருப்பினும் பள்ளிக் குழந்தைகள் மேல் நல்வாய்ப்பாக விழவில்லை.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்கூரையை சீரமைக்க நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

