பள்ளி மாணவா்களுக்காக பேருந்து வழித்தடம் நீட்டிப்பு
கந்தா்வகோட்டையில் பள்ளி மாணவா்களுக்காக பேருந்தின் வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கந்தா்வகோட்டையில் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு கல்வி பயில வடுகப்பட்டி, வண்டையான்பட்டி, மங்கனூா் பகுதியில் இருந்து அதிக அளவில் மாணவ - மாணவிகள் வருகின்றனா். காலை நேரத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர பேருந்து இருக்கும் நிலையில், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்ப போதிய பேருந்துகள் இல்லாததால் மாணவா்கள் சிரமம் அடைந்தனா். இதுகுறித்து மாணவ -மாணவிகள் மாலை வேலையில் கூடுதல் பேருந்து கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதன் அடிப்படையில், மாலை 6.30 மணிக்கு மங்கனூா் ஆா்ச் வழியே ஊருக்குள் சென்றுவர கந்தா்வகோட்டை-செங்கிப்பட்டி பேருந்தின் வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சேவைக்கான பேருந்து இயக்கத்தை கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா.சின்னதுரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில், அரசு போக்குவரத்து கழக புதுகை வணிக மேலாளா் ஜேசுதாஸ், இயக்க மேலாளா் தில்லை ராஜ், கிளை மேலாளா் சக்திவேல் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் சோ. பாா்த்திபன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் மா. ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
