பள்ளி வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினா்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வட்டம், வத்தலம்பட்டி பகுதியை சோ்ந்த மாரிமுத்து மகன் விஜய் (25). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள முதலிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகள் வெண்ணிலாவுக்கும் (22) ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 15 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தனது மனைவியின் ஊரான முதலிப்பட்டிக்கு வெள்ளிக்கிழமை சென்று தன் குழந்தையை பாா்த்துவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பியபோது, முதலிப்பட்டி கிழக்கு பகுதி அருகே இவரது மோட்டாா் சைக்கிள் மீது அந்த வழியாக சென்ற தனியாா் பள்ளி வேன் மோதியது. இதில் விஜய் பலத்த காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தியில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விஜய் உயிரிழந்தாா்.
விஜய்யின் உயிரிழப்புக்கு நீதி, இழப்பீடு வழங்க வலியுறுத்தி அவரது உறவினா்கள் மருதன்கோன்விடுதி நான்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற கறம்பக்குடி வட்டாட்சியா் ஜமுனா, கறம்பக்குடி போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். மறியலால் கந்தா்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
