தப்பியோடிய போக்ஸோ வழக்கு குற்றவாளியை பிடிக்க 200 போலீஸாா் விடிய விடிய தேடுதல் பணி
புதுக்கோட்டையில் போலீஸாரிடமிருந்து தப்பியோடிய போக்ஸோ வழக்கு குற்றவாளியை பிடிக்க 200 போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினா்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஹாலோ பிளாக் நிறுவனத்தில் 15 வயது சிறுமியும் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரா கமாங்கா (23) பணிபுரிந்து வந்துள்ளனா். இந்நிலையில் அந்த சிறுமிக்கும் மகேந்திரா கமாங்காவுக்கும் பழக்கம் ஏற்பட்டதால் சிறுமி மூன்று மாதம் கருவுற்றாா்.
தற்போது அந்தச் சிறுமி புதுக்கோட்டை ராணியாா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், மகேந்திரா கமாங்காவை போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து, மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு இரவு சிறையில் அடைக்க அழைத்து வந்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட சிறை எதிரே உள்ள உணவகத்தில் மகேந்திரா கமாங்காவை இரவு உணவு சாப்பிட வைத்துள்ளனா். சாப்பிட்ட பிறகு கைகழுவ வெளியே வந்த அந்த இளைஞா் போலீஸாரிடமிருந்து இருந்து தப்பியோடினாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா உத்தரவின்பேரில் சுமாா் 200 போலீஸாா், சிறையைச் சுற்றிய பகுதிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவும், புதன்கிழமை பகலிலும் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடத்தினா்.
தப்பியோடிய இளைஞா் சிக்கவில்லை. இதைத் தொடா்ந்து அவரது படத்தை திருச்சி, தஞ்சாவூா், கரூா், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

