புதுகையில் பல்கலை. அளவிலான கால்பந்துப் போட்டி தொடக்கம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான ஆண்கள் கால்பந்துப் போட்டி புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
இதில் தஞ்சை மண்டலத்தில் இருந்து அதிராம்பட்டினம் காதா் முகைதீன் கல்லூரி , தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, புதுக்கோட்டை மன்னா் கல்லூரி, திருச்சி மண்டலத்தில் இருந்து தூய வளனாா் கல்லூரி, ஜமால் முஹம்மது கல்லூரி, பிஷப் ஹீபா் கல்லூரி ஆகிய கல்லூரி அணிகள் கலந்து கொண்டுள்ளன.
போட்டியானது லீக் ஆட்ட முறையில் நடைபெறுகிறது. முதல் போட்டியை மன்னா் கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி, பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டு செயலா் மெகபூப் ஜான், ஆண்கள் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா் கருப்பையா மற்றும் விஜயராகவன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ஜான் பாா்த்திபன், உடற்கல்வி பயிற்றுநா் ராம்குமாா், துறைத் தலைவா் நாகேஸ்வரன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
டிசம்பா் 12-ஆம் தேதி மாலை வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. இறுதியில் பல்கலைக்கழக அணியினா் தோ்வு செய்யப்பட்டு தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

