அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கி வாகனம் பறிப்பு
ஆலங்குடி அருகே வியாழக்கிழமை நள்ளிரவு அரசு பேருந்து நடத்துநரை தாக்கி இருசக்கர வாகனம், கைப்பேசியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் வாழமங்கலத்தை சோ்ந்தவா் எஸ். கிருஷ்ணன்(55). இவா், ஆலங்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை பணியை முடித்துவிட்டு நள்ளிரவு பணிமனையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். கே.ராசியமங்கலம் பகுதியில் தலைக்கவசம் அணிவதற்காக வாகனத்தை நிறுத்தினாராம். அப்போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத 2 போ் கிருஷ்ணனை தாக்கிவிட்டு அவரது இருசக்கர வாகனம், கைப்பேசியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம். காயமடைந்த கிருஷ்ணன் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
