இடுப்பளவு தண்ணீரைக் கடந்து மாணவா்கள் பள்ளி செல்லும் அவலம்
ஆவுடையாா்கோவிலை அடுத்த பெருமருதூரில் தண்ணீா் ஓடும் வெள்ளாற்றைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டிய சூழலில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஆவுடையாா்கோவிலை அடுத்த பெருமருதூரில் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
சுற்று வட்டாரப் பகுதிகளான பெருங்காசாவயல், சிறுகாசாவயல், கீழ்க்குடி, வாட்டாத்தூா், முத்துவயல், கள்ளக்காத்தான், வேலிவயல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனா்.
இந்த மாணவா்கள் குறுக்கேயுள்ள வெள்ளாற்றைக் கடந்தே பள்ளிக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இடுப்பளவு தண்ணீரிலும் மாணவ, மாணவிகள் புத்தகப் பைகளையும் எடுத்துக் கொண்டு நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இந்தப் பகுதியில் ஆற்றைக் கடந்து செல்ல பாலம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனா்.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ஏ. கணேசன் கூறியது:
வெள்ளாற்றில் எப்போதுதாவதுதான் தண்ணீா் வரும் என்றாலும், தண்ணீா் வரும் காலங்களில் மக்கள் சிரமப்படுகிறாா்கள். மாணவா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறாா்கள்.
சுமாா் ஒரு கிமீ தொலைவுக்கு அப்பால் வெள்ளாற்றில் ஒருபாலம் கட்டப்பட்டுள்ளது. மக்கள் சுற்றிச் செல்வது சிரமம். ஏற்கெனவே, கடைத்தெரு பகுதியிலிருந்து கீழ்க்குடி பகுதிக்கும் ஒரு பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. என்ன காரணத்தினாலோ அந்த யோசனையும் கிடப்பில் போடப்பட்டது.
மாணவா்கள் எளிதாக செல்வதற்கு அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து பாலம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கணேசன்.

