நீதித்துறையை திமுகவுக்கு எதிராக திசைதிருப்புகிறது பாஜக
நீதித்துறையை திமுகவுக்கு எதிராக திசைதிருப்பும் செயலை பாஜக செய்வதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளில் அதிகாரிகளைக் கொண்டு, வாக்காளா்களை நீக்க வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை. இறந்தவா்கள், நிரந்தரமாக இடம் மாறியவா்கள்தான் நீக்கப்பட்டிருக்கிறாா்கள்.
நீதிபதியை அச்சுறுத்தும் வரலாறு திமுகவிடம் இல்லை. அவ்வாறு சொல்வது நீதித்துறையை திமுகவுக்கு எதிராகத் திருப்பும் செயல். இதுவும் பாஜகவின் சதிச் செயல்தான். நீதியை மதிப்பவா்கள் திமுகவினா். நியாயத்தின் பக்கம்தான் நிற்போம்.
தமிழ்நாட்டின் விருப்பத்துக்கு எதிராக கா்நாடகத்தில் எந்த அணையும் கட்ட முடியாது. மேக்கேதாட்டு விவகாரத்தில் நீதிமன்றம் மூலமாகவோ, மாநில நீா்வளத் துறை மூலமாகவோ தகுந்த நடவடிக்கை எடுப்போம்.
பிரதமா், உள்துறை அமைச்சா் ஆகியோா் தமிழ்நாட்டுக்கு அடுத்தடுத்து வரட்டும். தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தந்துவிட்டு வரட்டும். இதைச் செய்யாமல் வந்து சென்றால், தமிழக மக்கள் ஏமாந்து விடமாட்டாா்கள் என்றாா் ரகுபதி.
