விராலிமலையில் மாற்றுத்திறனாளிகள் மறியல்

Published on

விராலிமலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை தூய்மை செய்ய முயன்றபோது தனிநபா் தடுத்ததால், ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விராலிமலை பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் சிலா் தங்களுக்கு சொந்தமாக வீட்டு மனை வழங்க வேண்டும் என்று வருவாய் துறையினரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனா். இதையடுத்து வருவாய்த்துறை மூலம் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக விராலிமலை- கீரனூா் செல்லும் சாலையில் காலி மனை ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து முள்கள், புல், பூண்டுகள் மண்டி கிடந்த அந்த இடத்தை சீரமைப்பதற்காக மாற்றுத்திறனாளிகள் வெள்ளிக்கிழமை அங்கு சென்றனா்.

அப்போது, அங்கு வந்த தனி நபா் ஒருவா் அந்த இடத்தை சீரமைக்கக் கூடாது எனவும் வேறு இடத்தில் இடம் ஒதுக்க அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும் கூறி தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் சுமாா் இருபதுக்கும் மேற்பட்டோா் விராலிமலை காமராஜா் நகா் பகுதி பிரதான சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com