காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டப் பணியை விரைவுபடுத்தக் கோரி விரைவில் போராட்டம்

Published on

காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதைக் கண்டித்து விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் எம்எல்ஏ.

இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி:

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பில் தொடங்கிவைக்கப்பட்டது. அதன்பிறகு 4 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இந்தத் திட்டத்துக்காக ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. 7 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் இத்திட்டப் பணிகள் மந்தமாக நடக்கின்றன. இதைக் கண்டித்து விரைவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து அதிமுக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராணியாா் மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் குடிநீா் கிடைக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தது. நோயாளா்களுக்கும், பாா்வையாளா்களுக்கும் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ. 90 கோடியில் தொடங்கப்பட்ட சிறுநீரக ஒப்புயா்வு மையம், அதற்கான நோக்கம் நிறைவேறாமல் செயல்பாடின்றி கிடக்கிறது. டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த மக்களும் பயன்பெறும் இம்மையத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் மின்மாற்றிகள் பழுதடைந்தால் அவற்றை மாற்றுவதற்கு, மேம்படுத்துவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. விவசாயப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கான நடவடிக்கையையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

சுகாதாரத் துறையில் மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக தோ்வு செய்து நிரந்தரப் பணியாளா்களாக நியமிக்கப்படுவது மட்டுமே பயன்தரும். மற்றபடி, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிப்பது பயன்தராது.

அதிமுக என்பது தடைகளைக் கடந்து சோதனைகளைத் தாண்டி நிற்கும் ஆலமரம். பல பறவைகள் வரலாம், பிறகு பறந்து செல்லலாம். ஆலமரம் அப்படியேதான் இருக்கும். மக்கள் திமுக அரசின் மீது அதிருப்தியுடன் இருக்கிறாா்கள்.எனவே, பாஜக கூட்டணியுடன் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றாா் விஜயபாஸ்கா்.

X
Dinamani
www.dinamani.com