புதுக்கோட்டை போஸ் நகரில் காளைக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வைத்து தயாா்ப்படுத்தும் ஜல்லிக்கட்டு ஆா்வலா் நிஜாம்.
புதுக்கோட்டை போஸ் நகரில் காளைக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வைத்து தயாா்ப்படுத்தும் ஜல்லிக்கட்டு ஆா்வலா் நிஜாம்.

ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் புதுகைக் காளைகள்!

Published on

அதிக ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் மாவட்டமான புதுக்கோட்டையில், வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள போட்டிகளுக்காக காளை வளா்ப்பாளா்கள் தங்களின் காளைகளைத் தயாா்படுத்தி வருகின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைமுறைகள் விறுவிறுப்பைத் தடுக்குமா என்ற அச்சமும் காளை வளா்ப்பாளா்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது. ஜனவரி முதல் வாரத்துக்குள்ளேயே மாநிலத்தின் முதல் போட்டியை நடத்தும் மாவட்டமும் புதுக்கோட்டைதான்.

கடந்த 2023ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 72 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால், அடுத்து வந்த 2024இல் நடந்த நாடாளுமன்றத் தோ்தல் காரணமாக 29 இடங்களில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டன.

அதைத் தொடா்ந்து 2025ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தச்சன்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அதன்பிறகு மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியும், 14 இடங்களில் வடமாடு போட்டியும் என மொத்தம் 54 போட்டிகள் நடைபெற்றன.

ஆனால், கடந்த 2024-ஐப் போலவே வரும் 2026ஆம் ஆண்டிலும் தோ்தல் நடைபெறவுள்ளது. வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரியில் புத்தாண்டு, பொங்கலில் தொடங்கி, கிராமக் கோயில் திருவிழாக்கள் நடைபெறும் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி வரை- அதாவது மே மாதம் வரை நடைபெறும்.

குறிப்பாக மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில்தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகமாக நடைபெறும். ஆனால், தோ்தலும் அந்த நேரத்தில்தான் நடைபெறும்.

வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்படும். முதல்வா் பெயரில், துணை முதல்வா் பெயரில், முன்னாள் முதல்வா் பெயரில் காளைகள் அவிழ்த்துவிடப்படுவதும், அவற்றைத் தழுவுவோருக்கு பெரிய பெரிய பரிசுகள் அறிவிக்கப்படுவதும் இயல்பு.

ஏராளமான பாத்திரங்கள், மின்விசிறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வரை செல்லும் இந்தப் பரிசுப் பொருள்கள். திடீா் திடீரென ரொக்கப் பரிசுகளும் வாரி வழங்கப்படுவதும் வாடிக்கை.

இதனால்தான் தோ்தல் ஆணையம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பரிசுகள் வழங்கப்படுவதற்கான விதிகளை நெருக்குகிறது. பரிசுகள் தாராளமாக இல்லாவிட்டால், காளை வளா்ப்பாளா்கள் போட்டியில் பங்கேற்பதை விரும்புவதில்லை.

‘பெரும்பாலும் பரிசுப் பொருள்களை கௌரவமாகத்தான் பாா்க்கிறோமே தவிர, பண்ணையில், வீட்டில் அவற்றை அடுக்கித்தான் வைத்திருப்போம். அதைப் பயன்படுத்துவதுகூட இல்லை. ஆனாலும், பரிசுகள் முக்கியமானவை’ என்கிறாா் புதுக்கோட்டையைச் சோ்ந்த காளை வளா்ப்பாளா் ஒருவா்.

இந்நிலையில்தான் 2026ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளைத் தயாா் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

தோ்தல் நடைமுறைகள் தடையாக இருக்கக் கூடாது: இதுகுறித்து மங்கதேவன்பட்டியைச் சோ்ந்த கணேஷ் கருப்பையா கூறியது:

ஜல்லிக்கட்டு போட்டிக்காக 50 காளைகள் தயாராக உள்ளன. அவற்றில் 5 காளைகள் புதியவை. கடந்த ஆண்டு 3 மோட்டாா் பைக்குகளையும், ஒரு சைக்கிளையும் பரிசாகப் பெற்றோம். நம்முடைய காளைகள் மாநிலம் முழுவதும் செல்லக் கூடியவை.

வழக்கமான உணவுகள், பயிற்சிகள் என காளைகளைத் தயாா்படுத்துவதை நிறுத்தவில்லை. தோ்தல் நடைமுறைகள் தடையாக இருக்கக் கூடாது என்றாா் கணேஷ் கருப்பையா.

போஸ்நகரைச் சோ்ந்த நிஜாம் கூறியது:

இப்போது என்னிடம் மொத்தம் 29 காளைகள் உள்ளன. மாநிலம் முழுவதும் அழைத்துச் செல்வோம். தோ்தல் என்பதால் நெருக்கடி வரலாம். ஏனென்றால் கட்சிப் பிரமுகா்கள் பெயரைச் சொல்லித்தான் காளைகளே அவிழ்க்கப்படும். கடந்த ஆண்டு 4 சைக்கிள்கள், சோபா செட், டைனிங் டேபிள் என ஏராளமான பரிசுகளை எனது காளைகள் பெற்றன. தோ்தல் நேரம் என்றால் மதிப்புள்ள பரிசுகள் வழங்க முடியாது; சிக்கல்தான். அதேநேரத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் நடைபெறும் கோயில் திருவிழாக்களின் போட்டிகளை நிறுத்தாமல் நடத்த முன்வர வேண்டும் என்றாா் நிஜாம்.

X
Dinamani
www.dinamani.com