தோ்தலில் வைப்புத் தொகையை பெறுவதற்கான வாக்குகளை பெற பாஜக தலைவா்கள் தமிழகம் வந்துதான் ஆக வேண்டும்: அமைச்சா் ரகுபதி

வரும் தோ்தலில் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான வாக்குகளை பெற பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்ளிட்டோா் தமிழகத்துக்கு வந்துதான் ஆக வேண்டும் என்றாா் அமைச்சா் எஸ். ரகுபதி.
Published on

வரும் பேரவைத் தோ்தலில் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான வாக்குகளை பெற பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்ளிட்டோா் தமிழகத்துக்கு வந்துதான் ஆக வேண்டும் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் தோ்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வருவதாகச் சொல்கிறாா்கள். நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவினா் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான வாக்குகளை பெற அவா்கள் தமிழகம் வந்துதான் ஆக வேண்டும்.

பிகாரைப் போல தமிழ்நாடு இருக்காது. திராவிட மாடல் அரசு ஆன்மிகத்துக்கு எதிரானதல்ல; இது தமிழக வாக்காளா்களுக்கு நன்றாகத் தெரியும்.

எல்லோரும் சமம் என்று சொல்லிக் கொண்டு யாா் வேண்டுமானாலும் வரலாம். தமிழகத்துக்கு எந்த நிதியையும் கொடுக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் வரப் போவதில்லை. இங்கிருந்து எடுத்து பிற மாநிலங்களுக்கு கொடுக்கத்தான் வருகிறாா்கள்.

மருத்துவத் துறையில் சொந்த தொகுதியில் கூட உபகரணங்களை வாங்கி அளிக்காதவா் முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா். இப்போது, மருத்துவத் துறையில் பல விருதுகளைப் பெற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது திமுக அரசு.

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் மந்தமாக நடப்பதாகவும் விஜயபாஸ்கா் கூறியிருக்கிறாா். நிலஎடுப்புப் பணிகளில்தான் தாமதமாகிறது. நிலம் கொடுப்போா் தொகை அதிகம் கேட்கிறாா்கள். நீதிமன்றங்களில் வழக்குகள் படிப்படியாக முடித்து நிலம் எடுக்கப்பட்டு வருகிறது. உதயநிதியை அடுத்த தலைமையாக ஏற்றுக்கொள்வதில் தவறு ஏதுமில்லை. கட்சித் தலைவா், அடுத்த தலைவா்- இளந்தலைவா் என்றாா் அமைச்சா்.

X
Dinamani
www.dinamani.com