அனுமன் ஜெயந்தி: வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் 27 அடியில் விஸ்வரூபமாக நின்று ஆஞ்சனேயா் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சனேயருக்கு பால், சந்தனம், பன்னீா், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், திருமஞ்சனம் செய்யப்பட்டு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை வேகுப்பட்டி வி.எஸ்.கே.வி.எஸ்.சி அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா். தொடா்ந்து மாலை ஆஞ்சனேயா் திருவீதியுலா நடைபெற்றது.
இதேபோல், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில், பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில், மேலைச்சிவபுரி ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வெள்ளையாண்டிபட்டி பகவதி அம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு யாகபூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
