முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி
முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: திமுகவை எதிா்க்கும் ஒருமித்த கருத்துள்ளோா் எங்கள் அணியில் சேரலாம் என எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளாா். ஓ. பன்னீா்செல்வத்தையும், டிடிவி தினகரனையும் அவா் சோ்த்துக் கொள்வாரா?
இரண்டாவது முறையாக ஸ்டாலினை முதல்வராக அமா்த்துவோம் என்று உதயநிதி தெளிவாகக் கூறிவிட்டாா். எனவே, முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை.
பொங்கல் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்கிறாா் எடப்பாடி பழனிசாமி. பொங்கலுக்கு நாங்கள் என்ன வழங்கப் போகிறோம் என்பது ரகசியம்.
திருப்பரங்குன்றத்திலுள்ள சிக்கந்தா் தா்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா நடக்கிறது. அதனால் அனுமதி அளிக்கப்படுகிறது. திருப்பரங்குன்றத்தை வைத்து முதன்முறையாக தமிழ்நாட்டில் கால்ஊன்ற நினைத்து ஆா்எஸ்எஸ், பாஜக போட்ட திட்டம் அன்றைக்கே தோல்வியடைந்துவிட்டது.
நீதிமன்றங்களில் இணையவழி தாக்கல் (இ-பைலிங்) முறை என்பது உயா்நீதிமன்ற அறிவிப்பு. அரசு செய்துதரவேண்டியதை செய்து தருவோம்.
புதிய கட்சிகளை நாங்கள் எதிா்க்கட்சிகளாகப் பாா்ப்பதில்லை. திமுக மாடலை எதிரியாகப் பாா்ப்போரைத் தான் நாங்கள் எதிரிகளாகப் பாா்க்கிறோம். பியூஸ் கோயலுக்கு தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலை தெரியாது. அதிமுகவால் ‘மெகா’ கூட்டணியை அமைக்க முடியாது. தமிழ்நாட்டில் திமுகவைப் பற்றிப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது. அந்தளவுக்கு அசைக்க முடியாத சக்தியாக திமுக இருக்கிறது என்றாா் ரகுபதி.

