புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
புதுக்கோட்டை
அரசுப் பேருந்துகளில் ‘ஸ்டிக்கா்’ ஒட்ட வந்த நாம் தமிழா் கட்சியினா் 44 போ் கைது
புதுக்கோட்டையில் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற சொல்லை ஸ்டிக்கராக ஒட்ட வந்த நாம் தமிழா் கட்சியினா் 44 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற சொல் இல்லை என்ற சா்ச்சை அண்மைக்காலமாக எழுந்துள்ளது. தமிழ்நாடு என்ற சொல்லை நீக்கியதாக நாம் தமிழா் கட்சியினா் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலா் வி. பொன்வாசிநாதன் தலைமையில் அக்கட்சியினா் வியாழக்கிழமை மாலை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கூடினா்.
அப்போது, ஸ்டிக்கா் ஒட்டும் போராட்டம் நடத்த அனுமதியில்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 44 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

