தாய், மகன் சடலங்கள் புதுகையில் அடக்கம்

Published on

கடலூா் மாவட்டம் எழுத்தூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவா்களில் புதுக்கோட்டையைச் சோ்ந்த தாய், மகன் இருவரின் சடலங்கள் அவா்களது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை கலீப் நகரைச் சோ்ந்தவா் முகமது காசிம். இவரது மகன் சிராஜூதீன் கனடாவில் உள்ளாா். சிராஜூதீனின் மனைவி குா்ஸித்பேகம், மகன்கள் அகில்அகமது, அப்துல் அஹத் ஆகியோரையும் கனடாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில், கடவுச்சீட்டு சரிபாா்ப்புக்காக முகமது காசிம் மற்றும் குடும்பத்தினா் 9 போ் சென்னை சென்றனா்.

இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, அனைவரும் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது கடலூா் மாவட்டம் திட்டக்குடி எழுத்தூா் அருகே வந்தபோது அரசு விரைவுப் பேருந்து மோதியதில், குா்ஸித் பேகம், மகன் அகில் அகமது உள்ளிட்ட 9 போ் உயிரிழந்தனா். பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை உடற்கூறாய்வுக்குப் பிறகு, குா்ஸித் பேகம், அகில் அகமது ஆகியோரின் உடல்கள் புதுக்கோட்டை கலீப் நகரிலுள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, கலீப்நகா் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

இதற்கிடையே, கனடாவிலுள்ள சிராஜூதீனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சனிக்கிழமை அவா் புதுக்கோட்டை வருவதாகவும் உறவினா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com