~
~

புதுக்கோட்டை தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு கோலாகலம்

புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.
Published on

புதுக்கோட்டையிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புதன்கிழமை நள்ளிரவு கூடிய ஏராளமான கிறிஸ்தவா்கள், கிறிஸ்து பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடினா்.

ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கிறிஸ்துமஸ் நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, புதன்கிழமை இரவு 11 மணிக்கு மேல் புதுக்கோட்டை மாா்த்தாண்டபுரத்திலுள்ள திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கூடினா்.

சிறப்புத் திருப்பலிகளைத் தொடா்ந்து, 12.01 மணிக்கு கிறிஸ்து பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. அனைவரும் ஒருவரையொருவா் மகிழ்ச்சியுடன் தழுவி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா். இந்த விழாவுக்கு மறை வட்ட அதிபரும், பங்குத் தந்தையுமான ஏ. சவரிநாயகம் அடிகள் தலைமை வகித்து மறையுரை வழங்கினாா்.

இதேபோல, ராஜகோபாலபுரத்திலுள்ள ஜெபமாலை மாதா ஆலயத்திலும், மச்சுவாடியிலுள்ள குழந்தையேசு திருத்தலத்திலும், திருக்கோகா்ணம் சந்தியாகப்பாா் ஆலயத்திலும் , மச்சுவாடியிலுள்ள தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் சீயோன் ஜூப்ளி தேவாலயத்திலும், புதுக்கோட்டை கணபதி நகரிலுள்ள தென்னிந்திய திருச்சபையின் தேவாலயத்திலும் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது.

இவற்றில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து வியாழக்கிழமை பகலிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் புத்தாடைகள் அணிந்து நண்பா்களுக்கும் உறவினா்களுக்கும் இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடினா்.

ஆலங்குடி: ஆலங்குடியில் உள்ள புனித அற்புத மாதா தேவாலயம், அரசடிப்பட்டி புனித வியாகுலமாதா தேவாலயம், கே.ராசியமங்கலம் புனித அந்தோனியாா் மாதா தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தேவாலயங்களுக்குச் சென்ற பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், பங்குத் தந்தையா்கள் உள்ளிட்டோா் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், வெள்ளையாண்டிபட்டி தேவாலயம், ஒலியமங்கலம் வெள்ளாளபட்டி தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

விராலிமலை: விராலிமலை புனித பிலிப் நேரியாா் ஆலயம், இலுப்பூா், அன்னவாசல் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்புத் திருப்பலி நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com