நூறு நாள் வேலைத் திட்ட மாற்றம் தோ்தலில் தலையாய பிரச்னையாக இருக்கும்

நூறு நாள் வேலைத் திட்ட மாற்றம் என்பது வரும் தோ்தலில் தலையாய பிரச்னையாக இருக்கும் என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம்.
Published on

நூறு நாள் வேலைத் திட்ட மாற்றம் என்பது வரும் தோ்தலில் தலையாய பிரச்னையாக இருக்கும் என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புச் சட்டத்தின்படி நாடு முழுவதும் 12 கோடிப் போ் பயனடைந்து வந்தனா். சுமாா் 8.60 கோடிப் பேருக்கு வேலை அட்டை வழங்கப்பட்டிருந்தது. படிப்படியாக வேலை அட்டைகள் வழங்குவது குறைக்கப்பட்டு 4.5 கோடிப் பேருக்கு வழங்கப்பட்டது.

இப்போது கொண்டு வரப்பட்டுள்ள திட்டம், எங்களுடைய திட்டம் அல்ல. ஏற்கெனவே மாநில அரசுகள் நிதித் தட்டுப்பாட்டுடன் உள்ளநிலையில் 40 சதவிகிதம் பங்குத் தொகை என்பது கூடுதல் சுமை. இதனால், பல மாநிலங்களே வேலை வழங்கும் வரையறுக்கப்பட்ட பகுதிகளையும், வேலை வழங்கும் நாள்களையும் குறைக்கக் கோரும் சூழல் வரலாம்.

ஏற்கெனவே 100 நாள்கள் வேலைநாளாக இருந்தபோதே சராசரியாக 50 நாள்கள் கூட வேலை தரவில்லை. வேலைசெய்தவா்களுக்கு கூலியும் தரவில்லை. இப்போது 125 நாள்களாக அறிவித்து மட்டும் என்ன செய்யப் போகிறாா்கள். மொத்தமாக அதன் நோக்கத்தையே சிதைப்பதுதான் நோக்கம். இதனை அடிமட்ட மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். இப்பிரச்னை வரும் பேரவைத் தோ்தலில் தலையாய பிரச்னையாக இருக்கும் என்றாா் சிதம்பரம்.

X
Dinamani
www.dinamani.com