திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக யாகசாலைக்கு பந்தல்கால்!
திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான யாக சாலை அமைக்கும் பணிகளுக்கு பந்தல்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாநகரிலுள்ள திருவப்பூரில் பழைமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கின. தற்போது திருப்பணிகள் நிறைவுபெற்று வரும் நிலையில் வரும் ஜன. 28-ஆம் தேதி புதன்கிழமை கும்பாபிஷேக விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான யாக சாலை பூஜைகள் ஜன. 22-ஆம் தேதி தொடங்குகின்றன. இதற்காக யாகசாலை அமைக்கும் பணிகளுக்கான பந்தல்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பந்தல்காலுக்கு பூஜைகளை செய்து வைத்து, தோளில் தூக்கி வந்து பந்தல்காலை நட்டு வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயா் செ. திலகவதி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

