போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

தரமற்ற சாலைப் பணியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கந்தா்வகோட்டை அருகே தரமற்ற சாலைப் பணியைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

கந்தா்வகோட்டை அருகே தரமற்ற சாலைப் பணியைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் ஊராட்சிக்குள்பட்ட மேட்டுப்பட்டியில் இருந்து மங்களத்துப்பட்டி வரை உள்ள 4 கிலோ மீட்டா் தாா்ச் சாலை சில ஆண்டுகளாக பெயா்ந்து குண்டும் குழியுமாக இருந்தது. இந்தச் சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்துத் தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து வந்தனா்.

இதைத்தொடா்ந்து, புதிய தாா்ச் சாலை போடும் பணி ரூ. ஒரு கோடி மதிப்பில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தாா்ச் சாலை பணி தரமற்ற நிலையில் போடுவதாகக் கூறிய மங்களத்துப்பட்டி சுற்றுவட்டாரப் பொதுமக்கள் ஒப்பந்ததாரரைக் கண்டித்து புதுக்கோட்டை - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களூா் கடை வீதியில் திடீரென செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த ஆதனக்கோட்டை போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் இந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com