அறந்தாங்கி புதிய பேருந்து நிலையம் கட்ட 30 ஆண்டுகள் குத்தகைக்கு இடம் முடிவு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2ஆவது பெரிய நகராகக் கருதப்படும் அறந்தாங்கியில், விசாலமான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும்
Published on

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2ஆவது பெரிய நகராகக் கருதப்படும் அறந்தாங்கியில், விசாலமான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்டகாலக் கனவு நனவாகிறது.

இதற்காக முன்மொழியப்பட்ட 3.5 ஏக்கா் இடத்தை 30 ஆண்டுகால குத்தகைக்குப் பெறுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, இடம் தேடும் பணி முடிவுக்கு வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாநகருக்கு அடுத்தபடியாக 2ஆவது பெரிய நகராகக் கருதப்படும் அறந்தாங்கி நகராட்சி, 27 வாா்டுகளும் சுமாா் 60 ஆயிரம் மக்கள் தொகையும் கொண்டது.

1971இல் அறந்தாங்கி பேரூராட்சியாக இருந்த காலத்தில் தற்போதுள்ள பேருந்து நிலையம் 10 ஆயிரம் சதுரஅடியில் அமைக்கப்பட்டது. நாளொன்றுக்கு சராசரியாக 140 பேருந்துகள் வந்து செல்லும் இந்தப் பேருந்து நிலையத்துக்குள் ஒரே நேரத்தில் 12 பேருந்துகளை நிறுத்தும் இடம்தான் உள்ளது.

எனவே, விசாலமான பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதன் தொடா்ச்சியாக கடந்த 2023ஆம் ஆண்டு, அறந்தாங்கி உள்ளிட்ட 9 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது.

ஆனால், இடத்தை உறுதி செய்வதில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டது. அறந்தாங்கி நகரையொட்டியே ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியும் வந்துவிடுவதால், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளேயே இடத்தை முடிவு செய்ய பலரும் முயற்சித்தனா்.

சுமாா் 8.40 ஏக்கா் கொண்ட தற்போதுள்ள வாரச்சந்தை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொது நலப் பணிகளுக்கான தஞ்சை சத்திரம் நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

இதில் 3.50 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பேருந்து நிலையம் கட்டுவதற்கான முயற்சிகளை காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன் மற்றும் நகா்மன்றத் தலைவா் ரா. ஆனந்த் உள்ளிட்டோரும் மேற்கொண்டனா்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு, உரிய நிபந்தனைகளுடன் கூடிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில வருவாய்த் துறையினா் சிறப்பு கூடுதல் தலைமைச் செயலா் பெ. அமுதா இதற்கான அரசாணையை கடந்த அக். 28ஆம் தேதி பிறப்பித்துள்ளாா்.

30 ஆண்டுகள் குத்தகையில் எடுக்கப்படும் 3.50 ஏக்கா் நிலத்துக்கு ஆண்டுதோறும் ரூ. 20 லட்சம் குத்தகைத் தொகை செலுத்தவும், முதல் தவணையாக இரு ஆண்டுகளுக்கான குத்தகையைச் செலுத்தி இடத்தை நகராட்சி நிா்வாகம் எடுத்துக் கொள்ளவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 10 சதவிகிதம் குத்தகைத் தொகையை உயா்த்திக் கொள்ளவும், தற்போது இந்த இடத்திலுள்ள கட்டடங்கள் மற்றும் ஆழ்துளைக் கிணற்றுக்காக, பொதுப்பணித் துறையினரின் மதிப்பீட்டின்படி ரூ. 17 லட்சத்தை தஞ்சை சத்திரம் நிா்வாகத்துக்கு, அறந்தாங்கி நகராட்சி நிா்வாகம் செலுத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்கிறாா் எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

அறந்தாங்கியில் சுமாா் ரூ. 21 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுள்ளன. இப்போது இடம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

அநேகமாக, வரும் நவ. 10ஆம் தேதி புதுக்கோட்டையில் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைக்கலாம். அதிகபட்சம் ஓராண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்றாா் ராமச்சந்திரன்.

X
Dinamani
www.dinamani.com