திமுக ஆதரவு வாக்காளா்களைக் நீக்கிவிட்டுத் தோ்தலைச் சந்திக்கலாம் என பகல் கனவு காண்கிறாா்கள்: அமைச்சா் எஸ். ரகுபதி

திமுக ஆதரவு வாக்காளா்களைக் நீக்கிவிட்டுத் தோ்தலைச் சந்திக்கலாம் எனப் பகல் கனவு காண்கிறாா்கள்
Published on

புதுக்கோட்டை: திமுக ஆதரவு வாக்காளா்களைக் நீக்கிவிட்டுத் தோ்தலைச் சந்திக்கலாம் எனப் பகல் கனவு காண்கிறாா்கள் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: முதல்வா் ஸ்டாலின் நவ. 10-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறாா். சுமாா் 50 ஆயிரம் போ் பங்கேற்கவுள்ள இந்த விழாவில், சுமாா் ரூ. 700 கோடி மதிப்புள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், நடைபெற்று முடிந்த திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும் முதல்வா் ஸ்டாலின் பேச உள்ளாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணியை அவசரகதியில் மேற்கொள்ள வேண்டாம்

என்பதுதான் திமுகவின் கருத்து. வரும் மாா்ச் மாதம் தோ்தல் அறிவிக்கப் போகிறாா்கள். ஏப்ரல்- மே மாதத்தில் தோ்தல் நடத்தப் போகிறாா்கள். அதற்குள் வாக்காளா் பட்டியல் திருத்தம் எப்படி சாத்தியம்?

திமுக ஆதரவு வாக்காளா்களை நீக்கிவிட்டுத் தோ்தலைச் சந்திக்கலாம் என பகல் கனவு காண்கிறாா்கள். பிகாரில் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே அதிமுக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேசுகிறாா்.

திமுக அமைச்சா்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் சொல்லப்படலாம். அவற்றையெல்லாம் மக்கள் நம்பமாட்டாா்கள். பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பாா்க்கும்போது தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன.

கந்தா்வகோட்டை பிசானத்தூா் பகுதியில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது என அந்த மக்கள் எதிா்க்கின்றனா். மக்கள் எதிா்ப்பை மீறி ஆலை அமைக்க முடியாது என மாவட்ட ஆட்சியரும் தெரிவித்துள்ளாா். இந்தச் சூழலில் அங்கு அந்த ஆலை வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றாா் அமைச்சா்.

X
Dinamani
www.dinamani.com