முதல்வா் புதுக்கோட்டை வருகை முன்னேற்பாடுகள் ஆலோசனை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் நடைபெறும் அரசு விழாவுக்காக, நவ. 10-ஆம் தேதி முதல்வா் ஸ்டாலின் வரவுள்ளதை அடுத்து, விழா ஏற்பாடுகள் குறித்து மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.
அனைத்துத் துறை அலுவலா்களும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பயனாளிகள் தோ்வு, அழைத்து வருதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகள், தடையில்லா மின்சார ஏற்பாடுகள், பந்தல் ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா, மா. சின்னதுரை, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், துணை மேயா் மு. லியாகத்அலி, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
