புதுக்கோட்டை
எரிவாயு உருளை கசிந்து தீ விபத்து: குடிசை தீக்கிரை, பெண் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் தீவிபத்து ஏற்பட்டதில் பெண் பலத்த காயமடைந்தாா். குடிசை வீடு தீக்கிரையானது.
கறம்பக்குடி அருகேயுள்ள வெட்டன்விடுதி பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன். கூலித் தொழிலாளி. இவரது குடிசை வீட்டில் செவ்வாய்க்கிழமை அவரது மனைவி லெட்சுமி, ஸ்டவ்வைப் பற்ற வைத்தபோது, எரிவாயு உருளையில் இருந்து கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டு லெட்சுமி காயமடைந்தாா். தீ குடிசை முழுவதும் பரவி எரியத்தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த ஆலங்குடி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தினா் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனா். இருப்பினும் குடிசை வீடு முழுதும் எரிந்து தீக்கிரையானது. காயமடைந்த லெட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
