அடகுநகைகளை திருப்பித்தராத நகைக் கடை முற்றுகை
அடகுபெற்ற நகையைத் திருப்பித்தர மறுத்து ஏமாற்றுவதாகக் கூறி புதுக்கோட்டை நகரிலுள்ள நகைக்கடையை பெண்கள் சிலா் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை தெற்கு ராஜவீதி அருகேயுள்ள நகைக்கடை ஒன்றில், குறைந்த வட்டிக்கு நகைக்கடனும் வழங்கப்படுவதாகக் கூறி நகைகள் அடகுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனை நம்பி புதுக்கோட்டை மாநகரப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனா். கடந்த சில நாள்களாக பணத்துடன் போய் நகையைத் திருப்பிக் கேட்டால் நாள் மாற்றி மாற்றி வரச் சொல்லியுள்ளனா்.
இந்நிலையில் கடந்த அக். 25-ஆம் தேதி நகைக்கடை பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு பெண்கள் அதிா்ச்சியடைந்தனா். இதுதொடா்பாக நகரக் காவல் நிலையத்தில் அவா்கள் புகாா் அளித்தனா்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் செவ்வாய்க்கிழமை பகலில் பூட்டப்பட்டிருந்த நகைக்கடை முன்பு கூடினா். அடகு பிடிக்கப்பட்ட நகையைத் திரும்பப் பெற்றுத் தர வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து பெண்கள் கலைந்து சென்றனா்.
