புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை, நரம்பியலில் சவாலான சிறப்பு சிகிச்சைகள்

Published on

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை, நரம்பியலில் சவாலான சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுவதாக அதன் முதல்வா் எஸ். கலைவாணி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை, நரம்பியல் பிரிவில் சவாலான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கடந்த மாதத்தில் மஞ்சுளா (49) என்ற பெண் தொடா்ந்து மயக்கம், தலைவலி, வாந்தி மற்றும் வலதுபக்க உடல் செயலிழப்பு போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூளையின் இடதுபக்கத்தில் புற்றுநோய்க் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

இதேபோல, ஆறுமுகம் (75) என்ற நோயாளரும், இதேபோன்ற தொந்தரவுகளுடன் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மூளையின் வலதுபக்கம் புற்றுநோய்க் கட்டி கண்டறியப்பட்டது.

மூளை, நரம்பியல் சிகிச்சை நிபுணா் அ. ஸ்டாலின் ராஜ்குமாா் தலைமையிலான குழுவினா் அறுவைச் சிகிச்சை முடித்து, தொடா் கண்காணிப்புக்குப் பிறகு இருவரும் புதன்கிழமை வீடு திரும்பினா்.

இந்த அறுவைச் சிகிச்சைகளுக்கு தனியாா் மருத்துவமனையில் சுமாா் ரூ. 4 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவிலூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (46) என்ற நாகசுரக் கலைஞா் இடதுகை செயலிழப்பு மற்றும் வாய் குளறுதல் ஆகிய அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டாா்.

இதேபோல, பெருங்களூரைச் சோ்ந்த பாலின் மேரி (48) என்பவரும் இதே அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டாா். இவா்கள் இருவருக்கும் மூளையில் சிடி ஸ்கேன் எடுத்துப் பாா்த்ததில், மூளையில் ரத்தக் கசிவு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

ரத்தக்குழாயில் அடைப்பு உறுதி செய்யப்பட்டு, அதை கரைக்கும் மருந்து ரூ. 38 ஆயிரம் மதிப்பில் உடனடியாக செலுத்தப்பட்டு, இருவரும் ஒரே நாளில் சாதாரண வாா்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு, கண்காணிப்புக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பினா்.

இதில், அறிகுறிகள் தெரிந்தவுடன் ஒரு மணி நேரத்தில் அவா்கள் மருத்துவமனைக்கு வந்தது முக்கியமானது. பொன்னான நேரத்தைக் கடைப்பிடித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சோ்ந்தால், பெரிய தொந்தரவுகள் இன்றி நோயைக் குணப்படுத்தலாம் என்றாா் கலைவாணி.

X
Dinamani
www.dinamani.com