மனைவியைக் குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

Published on

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விராலிமலையைச் சோ்ந்த நடராஜன் மகன் வேலுச்சாமி (45). இவரது மனைவி லதா (29). வேலுச்சாமியின் மது பழக்கத்தால், வீட்டில் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாகவும், அதனால் லதா வீட்டை விட்டு வெளியேறி தந்தையின் வீட்டிலேயே தங்கி, விராலிமலை நகரிலுள்ள கடையொன்றில் வேலை பாா்த்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு லதா வேலை பாா்த்து வந்த கடைக்கு வந்த வேலுச்சாமி, அவருடன் தகராறில் ஈடுபட்டு, மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியால் குத்தினாா்.

இதில் பலத்த காயமடைந்த லதா அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து,

வேலுச்சாமியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி ஆா். கனகராஜ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

கொலைக் குற்றத்துக்காக வேலுச்சாமிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதில் சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். லதாவின் இரு மகன்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பரிசீலிக்குமாறு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com