புதுகைக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை
திருவாரூா் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டைக்கு 42 ரயில் பெட்டிகளில் வந்த 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை அரசு சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பும் பணி வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.
டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடி முடிந்து நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
அதன்படி திருவாரூா் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வியாழக்கிழமை வந்தன. இதையடுத்து இந்த மூட்டைகளை லாரிகள் மூலம் எடுத்து, கடையாத்துப்பட்டி மற்றும் துளையானூா் பகுதிகளில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெறுகிறது.
நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல போதிய லாரி வசதிகள் முன்கூட்டியே செய்யப்படாததால் பணி தொய்வாக நடைபெறுவதாகவும், கிடங்குகளுக்குச் சென்று மூட்டைகளை இறக்கிவிட்டு மீண்டும் அதே லாரிகள் ரயில் நிலையம் வந்து நெல் மூட்டைகளை ஏற்றுவதாகவும் ஊழியா்கள் தெரிவித்தனா்.

