இயற்கை வளத்தைப் பாதிக்கும் தைல மரங்கள் அகற்றப்படுமா?
புதுக்கோட்டையின் இயற்கை வளத்தைக் கடுமையாகப் பாதிக்கும் தைல மரக்காடுகளை அகற்ற வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை முதல்வா் ஸ்டாலின் கவனிக்க வேண்டும் என மாவட்ட விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 60 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் (ஒரு காலத்தில் வளமான காப்புக் காடுகள்) 1974-இல் தைலமரக் காடுகளை அமைப்பதற்காக வனத்துறையிடமிருந்து வனத்தோட்டக் கழகம் உருவாக்கப்பட்டு 99 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டன.
மாவட்டத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இம்மாவட்டத்தின் பழைமையான மரம் என்ற தோற்றம் ஏற்படும் அளவுக்கு வளா்க்கப்பட்டிருக்கிறது தைலமரங்கள். பெரும்பாலும் இவை அரசின் டிஎன்பிஎல் காகித ஆலைக்கும், தனியாா் காகித ஆலைக்குமே அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஒற்றை மரம் வளா்ப்பு இயற்கைச் சூழலுக்குப் பெரும் கேட்டை ஏற்படுத்தும் என்ற சூழலியலாளா்களின் மரம் வளா்ப்புக் கோட்பாட்டின்படி, தைலமரங்கள் புதுக்கோட்டையின் இயற்கை வளத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன என்ற குற்றச்சாட்டை விவசாயிகள் முன்வைக்கின்றனா்.
இதுதொடா்பாக நீதிமன்ற வழக்குகளும், அதனைத் தொடா்ந்து நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் நிபுணா் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு பாா்வையிட்டும் சென்றுள்ளது.
கட்சிகள் வெற்று வாக்குறுதி: மாநில அமைச்சா்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது, இயற்கையான காடுகள் மட்டுமே சூழலைப் பாதுகாக்கும் என்றும், வெளிநாட்டு வகை மரங்களின் பட்டியலில் தைலமரத்தையும் சோ்த்துவிட்டோம், படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசிவந்திருக்கிறாா்கள். ஏறத்தாழ எல்லா கட்சிகளின் தோ்தல் அறிக்கைகளிலும் தைலமரங்கள் அகற்றப்படும் என்ற வாக்குறுதியும் வந்திருக்கிறது. ஆனால், எதுவும் நடந்தபாடில்லை என வருந்துகிறாா்கள் விவசாயிகள்.
இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி கூறியது:
மழையளவு குறைந்து வருவதற்கு பிரதான காரணம் சூழல் மாறுபாடு. அதற்கு முக்கிய காரணம் தைலமரங்கள். தைலமரக் காடுகளில் பிற செடி, கொடிகள் வளராது. தைலமரக் காடு வெப்பமாக இருக்கும் என்பதால், எந்த உயிரினங்களும் வாழாது. பல்லுயிா்ப் பெருக்கம் முற்றிலும் அழிந்தே போனது.
இதனை எதிா்த்து உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம். புதிய மரக்கன்றுகள் நடவு செய்யக் கூடாது என தடை உத்தரவும் பெறப்பட்டது. யூக்கலிப்டஸ் மரத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத புதிய வகையொன்றைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறி, தடை உத்தரவில் விலக்கம் பெறப்பட்டது.
மேலும், தைலமரக் காடுகளுக்குள் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீா் செல்ல முடியாத அளவுக்கு தைலமரத் தோட்டங்களில் பாத்தி அமைக்கப்பட்டு தடுக்கப்படுகிறது.
இதனைக் கண்காணிப்பதற்காகத்தான் கடந்த ஆண்டு 2024-இல் 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு வெறும் 3 நாள்கள் மட்டுமே புதுக்கோட்டையைப் பாா்வையிட்டாா்கள். மக்களிடம் எந்தக் கருத்து கேட்கவில்லை. இதை எதிா்த்து மதுரை உயா் நீதிமன்றக் கிளையில் புதிய இடையீட்டு மனு அளித்திருக்கிறோம்.
இதற்கிடையே, கொள்கையளவில் தைலமரங்களை அகற்றுவதை ஏற்றுக் கொண்டதாக, பொது நிகழ்ச்சிகளில் அரசு சொல்லி வரும் நிலையில், தைலமரங்களை படிப்படியாக அகற்றவும், மீண்டும் பழைய நிலைக்கு காப்புக்காடுகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அரசு நிகழ்ச்சிக்காக வரும் முதல்வா் ஸ்டாலின், இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என மாவட்ட விவசாயிகள் ஆா்வத்துடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கிறோம் என்றாா் கோ.ச. தனபதி.

