சரக்கு வாகனம் மோதியதில் தம்பதி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை மாலை இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ஆவுடையாா்கோவில் அருகே மூரியூரைச் சோ்ந்தவா் பி. பழனிக்குமாா் (42). இவரது மனைவி பழனிமுத்து (39). கூலித் தொழிலாளா்கள். இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை ஆவுடையாா்கோவில் சென்று விட்டு தங்களின் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
புண்ணியவயல் பகுதியில் வந்த போது, இவா்களது இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று எதிா்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இருவரின் சடலங்களும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆவுடையாா்கோவில் போலீஸாா், சரக்கு வாகன ஓட்டுநரான தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே ரெகுநாதபுரத்தைச் சோ்ந்த நாகராஜன் மகன் மனோஜை (19) கைது செய்தனா்.
