சோழீஸ்வரா் கோயிலில் காலபைரவா் ஜெயந்தி விழா
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை, காலபைரவா் திருஅவதார திருநாளை முன்னிட்டு காலபைரவா் ஜெயந்தி விழா நடைபெற்றது.
தொடக்கமாக மாஹாருத்ர ஹோமம் நடைபெற்றது. பூஜையில் 151 வலம்புரி சங்குகளில் புனித நீா் நிரப்பப்பட்டு பக்தா்கள் சங்குகளை ஏந்தி ஊா்வலமாக கோயிலை வலம் வந்தனா்.
தொடா்ந்து, சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் காலபைரவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளி அங்கி மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா். தொடா்ந்து, ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. அதேபோல பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில்களில் காலபைரவருக்குசிறப்பு வழிபாடு நடைபெற்றன.

