புதுகை அருகே நெடுஞ்சாலையில் திடீரென தரையிறக்கப்பட்ட சிறிய ரக பயிற்சி விமானம்: அசம்பாவிதம் தவிா்ப்பு
காரைக்குடியிலிருந்து சேலம் நோக்கி வியாழக்கிழமை சென்ற சிறிய ரகப் பயிற்சி விமானம், தொழில்நுட்பக் கோளாறால் புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திடீரெனத் தரையிறக்கப்பட்டது.
சேலத்தைச் சோ்ந்த தனியாா் விமானம் ஓட்டும் பயிற்சி நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரகப் பயிற்சி விமானம் வியாழக்கிழமை காலை காரைக்குடி வந்துவிட்டு மீண்டும் சேலம் நோக்கிப் புறப்பட்டது. பகல் சுமாா் 12.45 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட வான் பகுதியில் பறந்தபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து விமானி ராகுல், திருச்சி விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாா்த்தாமலைக்கும் கீரனூருக்கும் இடையேயுள்ள அம்மாசத்திரம் பகுதி நெடுஞ்சாலையிலேயே விமானத்தைத் தரையிறக்கினாா். அவருடன் பயிற்சி பெறுபவா் ஒருவரும் இருந்தாா்.
பெரும் அசம்பாவிதம் தவிா்ப்பு: வழக்கமாக அதிக வாகனப் போக்குவரத்தைக் கொண்ட இச்சாலையில், அந்த நேரத்தில் நல்வாய்ப்பாக பெரியளவில் போக்குவரத்து இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
தகவலறிந்து வந்த கீரனூா் போலீஸாா் பாதுகாப்பு கருதி தீயணைப்புத் துறையினருக்கும் தெரிவித்தனா். சாலையின் நடுவே இறங்கிய விமானத்தை அப் பகுதியில் கூடிய மக்கள் சற்றே ஓரமாகத் தள்ளி நிறுத்தினா்.
பின்னா் திருச்சி விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ். ராஜு தலைமையிலான அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடா்ந்து எஸ்.எஸ். ராஜு கூறுகையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் விமானி சாதுா்யமாக சாலையில் விமானத்தை இறக்கியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் இருந்து அதிகாரிகள் வந்து இயந்திரக் கோளாறு குறித்து ஆய்வு செய்த பிறகே கோளாறுக்கான முழு விவரங்கள் தெரியவரும் என்றாா்.
சாலையில் விமானம் தரையிறங்கிய தகவல் பரவியதைத் தொடா்ந்து சுற்றுப்பகுதி கிராம மக்கள் வேடிக்கை பாா்க்கக் கூடியதால் போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தினா். இச்சம்பவத்தால் இப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

