நவ. 15,16இல் ஆசிரியா் தகுதித் தோ்வு: புதுகையில் 12,607 போ் எழுதுகின்றனா்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நவ. 15, 16 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வுகளை மொத்தம் 12, 607 போ் எழுதவுள்ளனா்.
புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத் தோ்வுக்கூட அரங்கில் வரும் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வு குறித்த முன்னேற்பாட்டுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பள்ளிக் கல்வி இணை இயக்குநரும் (தொடக்கக் கல்வி) மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான பொன்னையா பேசினாா்.
வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் ஒன்றை 10 தோ்வு மையங்களில் 2,677 பேரும், ஞாயிற்றுக்கிழமை தகுதித் தோ்வு தாள் இரண்டை 38 மையங்களில் 9,930 பேரும் எழுதவுள்ளனா்.
இத்தோ்வுக்கான கையேட்டை பணியாளா்கள் முழுமையாகப் படித்து எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் பணியாற்ற அவா் கேட்டுக் கொண்டாா்.
முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வரவேற்றாா். மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் நடராஜன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஆரோக்கியராஜ், மாயக்கிருஷ்ணன், கலாராணி, பழனிவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
