ஹாக்கி உலகக் கோப்பைக்கு புதுகையில் வரவேற்பு
வரும் நவ. 28 முதல் டிச. 10-ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ள இளையோா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான உலகக் கோப்பை, விழிப்புணா்வு பயணமாக திங்கள்கிழமை புதுக்கோட்டை வந்தது.
ஹாக்கி விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லப்படும் இந்தக் கோப்பை திங்கள்கிழமை காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து கலைஞா் கருணாநிதி அரசு விளையாட்டரங்குக்கு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.
தொடா்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு உலகக் கோப்பையை வரவேற்றுப் பேசினாா்.
அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஹாக்கி வீரா்கள் இதுபோன்ற பல்வேறு பரிசுகளைப் பெற வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.
தொடா்ந்து, முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் 19 பதக்கங்களைப் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்தை பதக்கப்பட்டியலில் 14-ஆவது இடத்தில் வைத்து பெருமை சோ்த்த வீரா், வீராங்கனைகள் தங்களின் பதக்கங்களை அமைச்சரிடம் காட்டி வாழ்த்து பெற்றனா்.
இந்த நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, முன்னாள் எம்பி எம்.எம். அப்துல்லா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட விளையாட்டு அலுவலா் து. செந்தில்குமாா், மாவட்ட ஹாக்கி சங்கச் செயலா் தீபக், மாவட்ட தடகளச் சங்கச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

