புதுகை அஞ்சலகங்களில் முகவா்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவா்கள், கள அலுவலா்களாகப் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பி. முருகேசன் அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்வதற்காக நேரடி முகவா்கள் மற்றும் கள அலுவலா்களாக செயல்பட விண்ணப்பிக்கலாம். தோ்ந்தெடுக்கப்படுவோா் செய்யும் வணிகத்துக்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும்.
18 வயது நிரம்பிய, குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா் இதில் சேரலாம். நேரடி முகவா் பணிக்கு வேலை இல்லாதோா், சுயதொழில் புரிவோா், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி ஊழியா்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களும் விண்ணப்பிக்கலாம்.
கள அலுவலா் பணிக்கு ஓய்வுபெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியா்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தோ்ந்தெடுக்கப்படுவோா் ரூ. 5,000-க்கு தேசிய சேமிப்புத் திட்டம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை குடியரசுத் தலைவருக்கு ஈடு செய்து சமா்ப்பிக்க வேண்டும். உரிமம் முடியும் காலத்தில் பத்திரம் திரும்பத் தரப்படும். விருப்பமுள்ளோா் வரும் டிச. 3 முதல் 5-ஆம் தேதி வரை புதுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் நோ்காணலில் நேரடியாகப் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04322-221220 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
