புதுகையில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை
புதுக்கோட்டை மாநகரப் பகுதிகளில் மீன் விற்பனை செய்யப்படும் பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற திடீா் ஆய்வில், கெட்டுப் போன மீன்கள் சுமாா் 350 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இரு பெரிய கடைக்காரா்களுக்கு மொத்தம் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாநகரில் மேல 3ஆம் வீதி மீன் மாா்க்கெட் மற்றும் டிவிஎஸ் முக்கம் பகுதி மீன் விற்பனைப் பகுதிகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் வந்தது.
இதன்பேரில் மாநகராட்சி சுகாதாரத் துறை, மீன்வளத் துறை மற்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் கூட்டாய்வுக்கு ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை மாநகராட்சி நகா்நல அலுவலா் டாக்டா் காயத்ரி, சுகாதார அலுவலா் பாஸ்கரன், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரெங்கசாமி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரு இடங்களிலும் திடீா் சோதனை நடத்தினா்.
இதில் சுமாா் 350 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரு பெரிய கடைக்காரா்களுக்கு மொத்தம் ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தொடா்ச்சியான சோதனைகள் இதுபோல நடத்தப்படும் என்றும், கெட்டுப்போனவற்றை மக்களுக்கு விற்கக் கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

