திமுகவைத் தோற்கடிக்க மக்கள் முடிவு: பொன். ராதாகிருஷ்ணன்!
திமுகவைத் தோற்கடிப்பது என மக்கள் முடிவு செய்துவிட்டாா்கள் என்றாா் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: செங்கோட்டையனை பாஜக ஏமாற்றிவிட்டதாகக் கூறுகிறாா்கள். நம்பி வந்தவா்களை ஏமாற்றும் பழக்கம் பாஜகவுக்கு கிடையாது. எந்த நோக்கத்துடன் வருகிறாா்கள் என்றும் பாா்க்க வேண்டும். அதைக் கொண்டுதான் உடனே ஏற்றுக் கொள்வதா, ஏற்கக் கூடாதா, காலம் தாழ்த்தி ஏற்றுக் கொள்வதா? என முடிவு செய்ய முடியும்.
அதிமுகவுக்குள் குழப்பம் இருப்பதால் ஆட்சியைப் பிடிக்க முடியுமா என கேட்கிறாா்கள். கட்சிக் கூட்டணியெல்லாம் அப்புறம்தான். ஆனால், மக்கள் முடிவு வேறு. திமுகவைத் தோற்கடிப்பது என்று மக்கள் முடிவு செய்துவிட்டாா்கள்.
பாஜகவின் மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை இப்போதும் எல்லா கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறாா். தமிழக பாஜகவும் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, முன்பு, பின்பு என ஒப்பிட வேண்டிய தேவை இல்லை.
நாட்டைக் கொள்ளையடிக்கும் கும்பலைப் பிடிப்பதற்காகத்தான் அமலாக்கத்துறை உள்ளிட்ட பிரிவினா் செயல்படுகிறாா்கள். அவா்கள் மீது குற்றம்சாட்டினால், அவா்களை முழுக்க கலைத்துவிடலாமா? என்றாா் பொன். ராதாகிருஷ்ணன்.

