நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை காது, வாயைப் பொத்தி கோரிக்கை அட்டைகளை கழுத்தில் அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. கருப்பையா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சு. கண்ணன், மாவட்டப் பொருளாளா் மு. பிரேம்குமாா், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் இரா. ரெங்கசாமி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், ‘சாலைப் பணியாளா்களின் 41 மாதப் பணி நீக்கக் காலத்தை சென்னை உயா் நீதிமன்றத் தீா்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். நெடுஞ்சாலைகளின் பராமரிப்பை தனியாருக்கு வழங்காமல், அரசே பராமரிக்க வேண்டும்.
இறந்த சாலை பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டைகளை கழுத்தில் அணிந்திருந்தனா்.

