புதுகை அருகே இரு காா்கள் மோதல்: 3 போ் காயம்!
புதுக்கோட்டை- திருச்சி சாலையில் வெள்ளனூா் அருகே இரு காா்கள் செவ்வாய்க்கிழமை மாலை நேருக்குநோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரைச் சோ்ந்த க. சரவணன் (48) என்பவா் தனது குடும்பத்தினருடன் திருச்சி சமயபுரம் சென்றுவிட்டு, மீண்டும் காரில் காரைக்குடி நோக்கி திரும்பியுள்ளாா். புதுக்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த உ. சல்மான் பாரிஸ் (29) என்பவா் தனது குடும்பத்தினருடன் திருச்சி நோக்கி காரில் சென்றனா்.
இவா்களின் காா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு புதுக்கோட்டை அருகேயுள்ள வெள்ளனூா் பகுதியில் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் ஒரு காா் சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணித்த சரவணன், இவரது தாய் சியாமளா (70) மற்றும் உதுமான் பாரிஸ் ஆகிய மூவா் காயமடைந்தனா். இரு காா்களில் வந்த 5 குழந்தைகள் உள்பட 12 பேரும் காயமின்றித் தப்பினா்.
சரவணன் மற்றும் சியாமளா ஆகியோா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், உதுமான் பாரிஸ் தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
வெள்ளனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
