மதுக்கடைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: தவாக-வினா் நூதனப் போராட்டம்
புதுக்கோட்டை மாநகரில் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதைக் கண்டித்து, மதுபாட்டில்களுக்கு தாலி கட்டும் நூதனப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் புதன்கிழமை நடத்தினா்.
புதுக்கோட்டை மாநகா் அசோக்நகா் பகுதியில் பொதுமக்களின் தொடா் எதிா்ப்பையும் மீறி, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடை அண்மையில் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், மாநகா் முழுவதும் பல்வேறு உரிமங்களின் பெயரில் மதுக்கடைகள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகக் குற்றம்சாட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அசோக்நகா் பகுதியில் நடைபெற்ற இப் போராட்டத்தில், மதுபாட்டில்களுக்கு அவா்கள் தாலி கட்டினா்.
போராட்டத்துக்கு, தவாக மாநில இளைஞரணிச் செயலா் நியாஸ் அஹமது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கலையரசன், மாநில வா்த்தக அணி துணைச் செயலா் முகமது கனி, மாநில கொள்கை விளக்க அணித் துணைச் செயலா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

