மாவட்ட கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.
மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா்.
ராணியாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி, நிஜாம் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, பிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் இந்தப் போட்டிகள் வரும் அக். 31-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. மொத்தம் 2,800 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்கின்றனா்.
மாவட்டப் போட்டியில் முதலிடம் பெறுவோா் மாநிலப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனா்.
தொடக்க நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா, மா. சின்னதுரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாநகராட்சி துணை மேயா் மு. லியாகத்அலி, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

