மூன்று சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவருக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவருக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

அரிமளம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது இப்ராஹிம் மகன் பீா்முகமது (48). இவா், கடந்த 2023 ஜூலை மாதத்தில் 3 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் திருமயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பீா் முகமதுவை போக்ஸோ சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்தனா். வழக்கு விசாரணையின் முடிவில் மாவட்ட மகளிா் நீதிபதி ஆா். கனகராஜ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பிரிவுகளில் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த மூன்று பிரிவு சிறைத் தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக குற்றவாளி அனுபவிக்க வேண்டும். மொத்தம் 21 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மற்றொரு போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சட்டவிரோதமாக அடைத்து வைத்த குற்றத்துக்காக தலா ஓா் ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. ஆயிரம் அபராதமும், இருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த சிறைத் தண்டனைகளை, போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் 21 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிகள் 3 பேருக்கும் தலா ரூ. 5 லட்சம் தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

25 நாள்களில் தினமும் விசாரணை: மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தொடா்ந்து 25 வேலை நாள்களிலும் விசாரணை நடத்தி தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஒத்துழைப்பு கொடுத்த வழக்குரைஞா்கள், காவல்துறையினருக்கும் தீா்ப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com